நிலைவாழ்வு தரும் வான் அமுது

         நிலை  வாழ்வு தரும் வான் அமுது                                           (நற்கருணை) 

   உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் வாழ்வு தரும் உணவு நானே. என்னை நம்புவோர் நிலை வாழ்வைக்கொண்டுள்ளனர்.                    (யோவான் 6:48-49)

 ஒரு நாள் ஒரு இளைஞன், தன்னுடைய        வாழ்வில் எழும் பல்வேறு கேள்விகளுக்கும்,     தேடல்களுக்கும் பதில் தெரித்துக்கொள்ளும் ஆவலோடு ஒரு துறவியை அணுகினான். அந்த துறவி அவன் கையில் எதுவும் எழுதாத, வெறும் புத்தகத்தை கொடுத்து இதனை வாசி, ஆனால் ஒரு நிபந்தனை, காலை நேரத்தில் சூரியன் உதிக்கும் வேளையில் தான் இதனை திறந்து படிக்க வேண்டும் என்றார். அந்த இரவு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த இளைஞன், காலையில் புத்தகத்தை திறந்த போது, அது வெறுமையான பக்கங்களால் காட்சியளித்தது. மிகுந்த ஏமாற்றத்துடனும், குழப்பத்துடனும் அந்த இளைஞன் மீண்டும் துறவியிடம் சென்று முறையிட்டான். அந்த துறவி சிரித்த முகத்துடன் வாழ்வின் மறைபொருள் எழுதப்பட்ட வார்த்தைகளில் அல்ல, மாறாக ஒவ்வொரு தருணத்தையும் திறந்த இதயத்துடனும், நம்பிக்கை என்ற கருவியின் மூலம் அனுபவிப்பதில் தான் கிட்டும் என்றார்.  

 இறைவன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே!

                     இன்று நம் தாய் திரு அவையானது ஆண்டின் பொதுக் காலம் 19ம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்ற இந்த வேளையில் இத்திருப்பலியின் மையக் கருத்தாக நம்மை         சிந்திக்க, வாழ்வாக்க, இன்னும் ஒருபடி  அதிகமாக வழிபட நம்மை அழைப்பது  "வாழ்வு தரும் வான் அமுது". நிலை வாழ்வு தரும் வான் அமுது நற்கருணை.        

 காணமுடியும் அடையாளத்தில், காணமுடியாத அருள்.        (The invisible grace in the visible sign) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நற்கருணை நமது வாழ்வின் அடையாளம். நம் அனைவரின் ஆன்ம உணவு.

            (The Catechism of the Catholic Church) கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு கூறுகிறது, நற்கருணை நமது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், உச்சமுமாய் திகழ்கிறது.         (The Holy Eucharist is the source and summit of our Christian life).  

   சாதாரண அப்பத்துண்டில் ஒளிந்திருக்கும் இறை அருள், நம் அனைவருக்கும் வியப்பாய்       இருந்தாலும், புரிந்து கொள்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் இன்றளவும் சவாலாய் இருக்கிறது இந்த வாழ்வு தரும் வான் அமுது. ஏனென்றால் நற்கருணை ஒரு மறைபொருள். புரியாத புதிர். அண்டங்கள், கோள்கள் அனைத்தையும் படைத்த இறைவன், இந்த சிறிய அப்பத்துண்டிற்குள் பிரசனமாய் இருக்கிறார் என்பதை கேட்கிறபோது இது என்னங்க பேய் கதையா இருக்கு என்கிற நகைச்சுவை கலந்த பதில், நமது அறியாமையை, புரிந்துகொள்ள இயலாமையை படம் பிடித்து காட்டுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

               நாம் வாழும் இந்த அதிநவீன அறிவியல் உலகில் நாம் பார்க்கின்ற, சந்திக்கின்ற, சிந்திக்கின்ற ஒவ்வொன்றும் அறிவியல் பூர்வமானதா? அறிவியலோடு ஒத்துப்போகிறதா? அப்படி இருந்தால் அது உண்மை, இல்லை என்றால் பொய் என்கிற கருத்து பரவலாக காணப்படுகிறது. நமது புலனறிவுக்கு அப்பாற்பட்டதை, அறிவிற்கு எட்டாததை நாம் ஏற்க மறுக்கிறோம். புலனறிவுக்கு அப்பாற்பட்டவை உண்மை என்று மெய்யியல் உறுதி செய்கிறது. அப்படிப்பட்ட உண்மையை அடைய வெகு சிலரே முயற்ச்சிக்கிறார்கள். அவர்களின் தேடலுக்கும், புதிர்களுக்கு பதிலாக இறைவன் அமைகிறார். இறைவனே புதிராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட இறைவன் தனது இயல்பை மறைபொருள்கள் வாயிலாக விளக்குகிறார். அவற்றுள் நமது கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான மறைபொருளாக அமைவது தான் நற்கருணை. மனிதனை எவ்வாறு மண்புழு புரிந்துகொள்ள இயலாதோ, அதே போன்று தான் மனிதன் நற்கருணையை புரிந்துகொள்ள முடியாது என்பது மரபு சார்ந்த கருத்து. இன்றைய நற்செய்தி வாசகத்தை பார்த்தோம் என்றால் மாற்கு நற்செய்தியாளர் ஆண்டவர் இயேசுவின் இயல்பை உணவு என்கிற அடையாளம் மூலம் வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவே ஒளி,வாழ்வு ,வழி, உண்மை, உணவு போன்ற அடையாளங்களை விளக்கி, இயேசு யார் என்பதையும்,எல்லா கால, இட, சமய, பண்பாட்டு மக்களுக்கு எளிதில் புரிய வைக்கிறார். அனைத்து அடையாளங்களிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது தான் (உணவு) நற்கருணை என்கிற உண்ணதமான அடையாளம். ஏனெனில் மனித வாழ்வில் உணவின் பங்கு அளப்பரியது என்பதை யாராலும் மறுக்க இயலாது. உணவின் மேன்மையை இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எலியா வாயிலாக எடுத்துரைக்கிறது. எலியா பாலைநிலத்தில் நாள் முழுவதும் பயணம் செய்து கலைத்த நிலையில் ஆண்டவரின் தூதர் கொடுத்த உணவை உண்டு, வலிமை பெற்று நாற்பது பகல், நாற்பது இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

             இன்று நம் ஆண்டவர் இயேசு நற்செய்தியின் வாயிலாக மாபெரும் உண்மையை எடுத்துரைக்கிறார்

. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். (யோவான் 6:51).

              இறைவன் இயேசு முதல் முதலில் நற்கருணையை குறித்து ஆற்றிய போதனை இது. இயேசுவின் மித மிஞ்சிய பேச்சு, யூதர்களை அயரச்செய்தது. இயேசுவின் எளிய குடும்ப பின்னணி அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ள யூதர்களுக்கு மனம் வரவில்லை. நாசரேத்தில் வளர்ந்தவர், மரியாவின் மகன், தச்சர்; திடீர் என்று நான் வானிலிருந்து இறங்கி வந்தேன், நிலை வாழ்வை தருவேன், மோசேயைவிட பெரியவன் நான், யூதர்கள் தங்களின் தந்தையாக போற்றும் ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என்று இயேசு ஆண்டவர் பேச, யூதர்கள் உதட்டை பிதுங்கி, இதெல்லாம் நம்புரமாரியா சார் இருக்கு? என்றார்கள். யூதர்களின் அவநம்பிக்கையை பார்த்த இயேசு பின்வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறார்.                                                                 தன்னுடைய இறைத்தன்மையை ஆழமாக எடுத்துரைக்கிறார் இறைவன் இயேசு. இதுதான் உண்மையும் கூட.

                 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்னை நம்புவோர் நிலை வாழ்வை கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உணடபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவு என்றார் இறைவன் இயேசு. ( யோவான் 6:47-50).

                    கல்வாரி பீடமாக சிலுவையில் தூய ஆவியின் வல்லமையால் தந்தையின் மகிமைக்கு இயேசு தன் உடலையும், இரத்தத்தையும் நம் ஆன்ம உணவாக மாற்றிய தருணமாக இருக்கலாம்.

    எம்மாவுஸ் சீடர்கள், இயேசு அப்பத்தைப்பிட்டபோது அவர்களின் கண்கள் திறந்ததையும், இயேசு தான் உண்மையான இறைவன் என்பதை வலியுறுத்திய தருணமாக இருக்கலாம்.

  கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில், லான்சியானோ என்ற நகரில் முதல் முதலில் பதிவு செய்யப்பட்ட நற்கருணை புதுமை (Eucharistic Miracle). சாதாரண அப்ப துண்டுக்குள், உண்மையான ஆண்டவரின் உடலாகவும், இரத்தமாகவும் இறைவன் இயேசு தன்னை வெளிப்படுத்திய நிகழ்வு. இது உண்மையா அல்லது பொய்யா என்கிற கேள்வி எழுந்த போது, திருஅவை இரண்டு பல்கலைகழக பேராசிரியர்களை ஆண்டவரின் திரு உடலையும், திரு இரத்தத்தையும் பரிசோதனை செய்ய அனுமதித்தது. அவர்கள் சொன்ன பதில் உலகையே மெய்சிலிர்க்க வைத்தது. இது ஒரு இளைஞனின் இதய பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட உடல் என்று கூறினார்கள். 1300 ஆண்டுகள் கழித்தும் ஆண்டவர் இயேசு உண்மையான திரு உடல் திரு இரத்தம் வாயிலாக இன்று வரை அழியாமல் பிரசனமாய் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய தருணமாக இருக்கலாம்.

    அன்று முதல் இன்று வரை இறைவன் இயேசு கூறுவது ஒன்றை மட்டும் தான். உலகம் முடியும் வரை    எந்நாளும் நான் உங்களோடு (மத்தேயு 28:20) நற்கருணை என்னும் மாபெரும் அடையாளம் முலமாக இருக்கிறேன் என்பதைத்தான். 

  அன்று யூதர்களிடமும், சீடர்களிடமும் தன்னை வெளிப்படுத்திய இறைவன் இயேசு, இன்று இக்கல்வாரி திருப்பலியில் மூலம் உங்களிடமும் என்னிடமும் வெளிப்படுத்த இருக்கிறார். நம்முடைய பதில் என்னவாக இருக்க போகிறது. நம்பிக்கை என்கிற மனக் கண்ணாடியை வைத்து கிறிஸ்துவின் மறைபொருளை அனுபவித்து நிலை வாழ்வை பெறப்போகிறோமா? அல்லது இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்த்தது போல திறந்த மனமில்லாமல் அவநம்பிக்கையை கையில் எடுத்து இறைவன் இயேசுவை சந்தேகிப்பதும், அறிவுக்கு எட்டாத மறைபொருளை அறிவிப்பதற்கு உட்படுத்தி இறைவன்இயேசுவை மறுக்கப்போகிறேனா?

 இறைவன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே!

           ஆண்டவர் இயேசுவை சோதிப்பதை நிறுத்திவிட்டு, நாம் சோதனையில் விழாமல் இருக்க அவரை பற்றிக் கொள்வோம். இறைவன் இயேசு தன்னலமற்ற வாழ்வை வாழ்ந்தார். தான் சென்ற இடமெல்லாம் நன்மையை செய்தார், தான் சந்தித்த அனைவருக்கும் நற்செய்தியை போதித்தார். அவரை ஒவ்வொரு நாளும் உட்கொள்கிற நாம், நமது தன்னலமற்ற வாழ்க்கையால், நாம் செய்யும் நன்மைத்தனத்தால், கிறித்துவை பிரதிபலிக்க போகிறேனா! என்று சிந்திப்போம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்டது போல் கிறிஸ்துவின் வழியாகத் தான் நமக்கு மன்னிப்பு, வாழ்வு, மீட்பு என்பதை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு நாளும் நமது நம்பிக்கையால் வெளிப்படும் அன்பை நற்கருணை ஆண்டவரிடம் செலுத்தி அவர் அன்பினால் வரும் நிலை வாழ்வை பெற்று மூவொரு இறைவனின் பிள்ளைகளாக வாழத் இத்தெய்வீகத் திருப்பலியில் இணைந்து செபிப்போம். இறைவன் இயேசு, நற்கருணை நாதர் உங்களோடும் எல்லாரோடும் என்றென்றும் இருப்பாராக.


முதல் வாசகம் : 1 அரசர்கள் 19:4-8 

இரண்டாம் வாசகம்: எபேசியர் 4:30-32;5:1-2

நற்செய்தி வாசகம்: யோவான் 6: 41-51

Comments

Popular posts from this blog

Try to channelize your Anger.